LATEST NEWS
“யாரும் இந்த முடிவை எடுக்காதீங்க…” அதிமுக சார்பில் ரூ.55 லட்சம் நிதியுதவி…! மறைந்த நிர்வாகி மகேந்திரனின் மகளுக்கு முழு கல்விச் செலவையும் ஏற்கும் இபிஎஸ்…!!
உட்கட்சிப் பிளவுகளால் மனமுடைந்து தீக்குளித்து மாண்ட தஞ்சை மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரனின் உடலுக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளைச் சேர்ந்த 32 வயதான மகேந்திரன், அதிமுகவின் தற்போதைய சூழலால் வேதனையடைந்து, கட்சி மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற எடப்பாடியார், உயிரிழந்த நிர்வாகியின் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, கட்சியின் இந்த நிலைக்குத் தொண்டரின் குடும்பத்தாரிடம் கண்ணீருடன் மன்னிப்பும் கோரினார்.
மகேந்திரனின் மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு அஇஅதிமுக தலைமை சார்பில் 30 லட்ச ரூபாயும், தஞ்சை மாவட்டக் கழகம் சார்பில் 25 லட்ச ரூபாயும் என மொத்தம் 55 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அவரது குழந்தையின் முழுமையான கல்விச் செலவை அதிமுகவே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும், அக்குடும்பத்தின் எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் கட்சி என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இத்தகைய சோகமான நிகழ்வுகள் இனிமேல் தொடரக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் எளிய தொண்டர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற விபரீத முடிவுகளை எக்காரணம் கொண்டும் எடுக்க வேண்டாம் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
