LATEST NEWS
மகிழ்ச்சியாகத் தொடங்கிய பயணம்… மரணத்தில் முடிந்த துயரம்… வியட்நாம் படகு விபத்தில்… உயிர் தப்பியவரின் கண்ணீர் பேட்டி..!!
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலாச் சென்றிருந்தனர். அங்குள்ள அன்தோய் தீவுக்கூட்டப் பகுதியில் 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சொகுசு படகு ஒன்றில் சவாரி செய்துள்ளனர். அவர்கள் தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு அன்தோய் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், இந்த விபத்திற்குப் படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் ஒரு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 15 இந்தியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன் வியட்நாம் எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு மற்ற 21 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் பலியான தமிழர்கள் பழனி, தர்மபுரி, திருச்சி, சேலம், கும்மிடிப்பூண்டி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படகு விபத்து நடந்தது எப்படி என்பது தொடர்பாக விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பழனியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.நாங்கள் பயணித்த படகு மூடிய நிலையில் காணப் பட்டது. படகில் 36 பேர் பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென வீசிய ஓர் மிகப்பெரிய அலை படகை தாக்கியது. இதனால், படகு 3 நிமிடங்களுக்குள் வேகமாக கவிழ்ந்துவிட்டது .படகு வேகமாக சாய்ந்ததில் 20 பேர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். மற்றவர்கள் படகின் உள்ளேயே அதிர்ச்சியுடன் இருந்தோம். சிறிது நேரத்தில் மீட்பு படையினர் விரைந்து வந்து எங்களை பத்திரமாக மீட்ட னர். இவ்வாறு அவர் கூறினார்.இந்த துயர சம்பவத்திற்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாய்நாட்டிற்கு விரைவாகக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
