LATEST NEWS
“சினிமா மாய உலகை விட்டு வெளியே வாருங்கள்…” கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டவருக்கு கொலையா…? தவெக தலைவர் விஜய்யை அடியோடு வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி….!!
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா வியாபாரத்தை எதிர்த்த விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக்கேட்டால் கொலைதான் இந்த ஆட்சியின் பதிலா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு பொறுப்பேற்காமல் நழுவுவது வெட்கக்கேடானது என்று சாடியுள்ளார்.
மேலும், போதைப்பொருட்களை தம்மால் ஒழிக்க முடியாது என்பதை முதலமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், ஆட்சி நடத்துவது எப்படி என்று அவர் ஆறு மாத அவகாசம் கேட்டு ‘கிராஷ் கோர்ஸ்’ முடிப்பதற்குள் மக்கள் மடிந்து கொண்டே இருக்க வேண்டுமா என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பெண்களின் பாதுகாப்பிற்கான ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ திட்டத்தை கடந்த வாரம் இறுதிநேரத்தில் ரத்து செய்துவிட்டு, அடுத்த வாரம் தொடங்கப்போவதாகக் கூறுவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தனது உதவியாளர் வீட்டு விழாவிற்காக பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் சமரசம் செய்துவிட்டாரா என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சொந்த கட்சியினரையே அடக்கி வைக்க முடியாதவர் சட்டம் ஒழுங்கை எப்படி நிர்வகிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தான் வகிக்கும் பொறுப்பை உணராமல் இன்னும் சினிமா மாய உலகிலேயே உலா வரும் ‘ரீல் ஹீரோ’ முதலமைச்சர் விஜய், இனியாவது பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
