LATEST NEWS
BREAKING: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி கைது.. இரவோடு இரவாக அதிரடி…!!
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளருமான என். வீராசாமி (எ) வீரா, சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீனிடம் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான பில் தொகையை விடுவிக்க ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.வி. தினகரன், கட்சி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி வீராசாமியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ஒப்பந்ததாரர் நவீன் அளித்த புகாரின் அடிப்படையில், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் லஞ்சப் புகாரின் கீழ் தாழம்பூர் காவல் நிலையப் போலீசார் வீராசாமியைக் கைது செய்தனர். மாலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் தவெக நிர்வாகி வீராசாமி, தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
