LATEST NEWS
கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தபோது பின்னாடி வந்து தூக்கி வீசிய ஸ்கார்பியோ… அரை மணி நேரமாக ரோட்டில் கிடந்தும் கிடைக்காத உதவி… இரத்த வெள்ளத்தில் துடித்த சப்-இன்ஸ்பெக்டர்.. மனைவி பரிதாப பலி..!!
பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர்-மோகாமா நான்கு வழிச்சாலையில், அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியதில் புல்லட்டில் சென்று கொண்டிருந்த பீகார் காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி விபத்தில் சிக்கினர். ஆத்மகோலா காவல் எல்லைக்குட்பட்ட சப்னிமா கிராமத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஹரேராம் சர்மா மற்றும் அவரது மனைவி ரூபி தேவி ஆகியோர் லக்கிசராய் பகுதியில் உள்ள பிரபல அசோக் தாம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, பின்னால் வந்த ஸ்கார்பியோ வாகனம் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால், இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையோரம் விழுந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கார்பியோ ஓட்டுநர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். காயமடைந்த இருவரும் உதவி கேட்டு கதறியபோதிலும், சுமார் அரை மணி நேரத்திற்கு அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஹரேராம் சர்மா பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பலனின்றி அவரது மனைவி ரூபி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், நான்கு வழிச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பி ஓடிய ஸ்கார்பியோ ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
