LATEST NEWS
“எப்பா நல்லா இருக்கியா..?” இரவில் மகனுடன் போன் பேச்சு… காலையில் காணாமல் போன தாய், தந்தை… ஊரே திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 24 மணி நேரத்தில் வெளியான பகீர் உண்மை…!!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் சாயரா காவல் எல்லைக்குட்பட்ட புனாவளி கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாயமாகியிருந்த முதிய தம்பதியினரான லஹரிலால் பாலிவால் மற்றும் அவரது மனைவி ராதா தேவி ஆகியோரின் சடலங்கள், அவர்களின் வீட்டிலிருந்த ஒரு பெட்டிக்குள் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசியதை அடுத்து மீட்கப்பட்டுள்ளன. புதன்கிழமை காலையிலிருந்து தம்பதியினரைக்காணாத நிலையில், வியாழக்கிழமையன்று கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களைக் கண்டுபிடிக்குமாறு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் அவர்களின் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டார் சோதனையிட்டபோது இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இறந்த முதிய தம்பதியின் மகன் மனோகர் குஜராத்தின் ராஜ்கோட்டில் வேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் தனது தாயாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். புதன்கிழமை காலை வழக்கமாக பால் வியாபாரம் செய்யும் லஹரிலால் பால் விநியோகிக்க வராததால், அண்டை வீட்டார் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு திறந்த நிலையிலும், உள்ளே யாரும் இல்லாமலும் இருந்துள்ளது. உறவினர்கள் தேடியும் அவர்கள் கிடைக்காததால், மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
வெள்ளிக்கிழமை காலையில் வீட்டிற்குள் வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, தம்பதி இருவரின் சடலங்களும் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு, அதன் மேல் படுக்கைகள் அடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முதிய தம்பதி பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்ததால், யாரோ நோட்டம்மிட்டு செவ்வாய்க்கிழமை இரவே இக்கொலைச் சம்பவத்தைச் செய்துவிட்டு உடல்களைப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருப்பதாகக் குடும்பத்தினரும் கிராம மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சாயரா காவல்துறையினர், சடலங்களைக் கோகுந்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
