CRIME
நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..! வெறும் 20 ரூபாய்க்காக இப்படியா.? யாருமே கண்டுக்கல… படுரோட்டில் 40 நிமிடம் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மரண ஓலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆட்டோ கட்டணத் தகராறு காரணமாகப் போலீஸ் சாவடிக்கு உதவி கேட்டு வந்த 22 வயது இளைஞர் ஒருவர், காவலர்களின் அலட்சியத்தால் சுமார் 40 நிமிடங்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தேசியத் தலைநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் சிவான் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜ் குமார் என்ற கார் மெக்கானிக், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாபுதாம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநருடன் வெறும் 20 ரூபாய் கட்டணத்திற்காகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, நியாயம் கேட்க அங்கிருந்த பெண்களுக்கான ‘பிங்க்’ போலீஸ் சாவடிக்கு வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த ராஜ் குமார், உதவி கேட்டு அங்கிருந்த இரும்புத் கதவை பலமாகத் தட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அங்கிருந்த பெண் காவலர்கள், அவருக்கு உதவ முன்வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ் குமார், அங்கிருந்த கண்ணாடிக் கதவை பலமாகத் தட்டியபோது கண்ணாடி உடைந்து அவரது கையில் மிகக் கடுமையான வெட்டுக்காயம் ஏற்பட்டு, இரத்தப் பெருக்கு எடுத்துள்ளது. தான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோதும், சாவடிக்கு வெளியே சுமார் 40 நிமிடங்கள் கத்திக் கூச்சலிட்டு உதவி கேட்டும், உள்ளே இருந்த பெண் காவலர்கள் கதவைத் திறக்கவே இல்லை என்று அங்கிருந்த நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் கடைக்காரர் ஒருவர் அவசர உதவி எண்ணிற்கு அழைத்ததைத் தொடர்ந்து, இரண்டு போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ஆனால், இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்தவொரு ஆட்டோவும் நிறுத்தப்படவில்லை. இறுதியாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் தீவிர இரத்தப்போக்கு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நடந்து 72 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 8 மாத கர்ப்பிணியான அவரது மனைவி, கோமாவில் இருக்கும் தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனை உள்ளடக்கிய அந்த ஏழைக் குடும்பம் தற்போது தங்களுக்கு நீதி வேண்டும் என்று போராடி வருகிறது.
