CRIME
“கல்யாணம் பண்ண முடியாது..” மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்…தடுத்து நின்ற தாய் பலி..! விருதுநகரில் அரங்கேறிய கொடூரம்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தில், நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண் ஒருவரை அவரது உறவினர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலில் இருந்து தன் மகளைக் காப்பாற்ற முயன்ற தாய், அந்த வாலிபரால் சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான மற்றும் துயரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்குறிச்சியைச் சேர்ந்த வர்ஷா என்ற பெண்ணுக்கும், அவரது உறவினரான யுவராஜ் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இவர்களுக்கு இடையே இருந்த வயது வித்தியாசம் மற்றும் தொலைபேசியில் பேசும்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, யுவராஜை திருமணம் செய்ய வர்ஷா மறுத்துள்ளார். இதனால் வர்ஷாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை நிறுத்தினர். இதனால் கடும் ஆத்திரமடைந்த யுவராஜ், புதன்கிழமை காலை வர்ஷா தனது வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென அரிவாளுடன் வந்து அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார்.
மகள் அலறும் சத்தம் கேட்டு அவரைத் தடுத்துக் காப்பாற்ற ஓடிவந்த வர்ஷாவின் தாய் விநாயகஜோதி என்பவரையும் யுவராஜ் கொடூரமாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷாவை அண்டை வீட்டார் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் செயலைச் செய்துவிட்டு தப்பியோடிய யுவராஜ், பின்னர் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
