CRIME
“வாழ பிடிக்கல… அவங்கள விட்றாதீங்க அம்மா” காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.. கணவர், நாத்தனார் செய்த கொடூரம்… பெங்களூரில் அதிர்ச்சி..!!
பெங்களூரு காமாக்ஷிபால்யா காவல் எல்லைக்குட்பட்ட சுங்கதகட்டே பகுதியில், 25 வயதான தனியார் பள்ளி ஆசிரியை சுவேதா என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிக்மகளூரு மாவட்டம் தாரிகேரேவைச் சேர்ந்த இவர், குணிகல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரைக் காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் அவர் இந்த தீவிர முடிவை எடுத்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவேதா உயிரிழப்பதற்கு முன் தனது தாயாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது கணவர் மற்றும் நாத்தனார் ஆகியோர் தனக்குத் தொடர்ந்து கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இனிமேல் வாழப் பிடிக்கவில்லை என்றும், தனது மரணத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க வேண்டாம் என்றும் தாயாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து சுவேதாவின் தாயார் புஷ்பா கூறுகையில், தனது மகள் தினமும் கணவரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விருப்பப்படி திருமணம் நடந்த பிறகும், கூடுதலாகப் பணம் கேட்டு கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். சுவேதா இதுகுறித்துத் தொடர்ந்து வீட்டில் போன் செய்து அழுததாகவும், அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு தாங்கள் அறிவுறுத்துவதற்குள்ளாகவே இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
