LATEST NEWS
இப்படியும் அதிர்ஷ்டம் அடிக்குமா.? “40 ஆண்டு பாசம்.. மழையால் உடைந்த மரம்”.. 85 வயது முதியவருக்கு அடித்த ரூ.28 லட்ச அதிர்ஷ்ட ஜாக்பாட்..!
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவரான என்.ஜி.கேசரி என்பவரது வீட்டுத் தோட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே ஒரு சிறிய கன்று முளைத்தது. அது சந்தன மரம் என்பதை அறிந்த அண்டை வீட்டாரும் நண்பர்களும், அரசு சட்ட விதிகளுக்கு அஞ்சி மரத்தை வெட்டிவிடுமாறு எச்சரித்தனர். ஆனால், இயற்கை மீது கொண்ட பற்றால் அதை வெட்ட மறுத்த கேசரி, திருடர்களிடமிருந்து பாதுகாக்க இரும்பு வேலிகள் அமைத்து 40 ஆண்டுகளாகத் தன் பிள்ளை போல வளர்த்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் பெய்த கனமழையின் போது, அருகில் இருந்த பெரிய மரம் சரிந்து விழுந்ததில் கேசரியின் 40 ஆண்டுகால சந்தன மரம் பாதியாக உடைந்து சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ததில், அந்த மரம் சுமார் 1 மெட்ரிக் டன் எடையும், மிகத் தரமான முதிர்ச்சியையும் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
வனத்துறையினர் 1 மெட்ரிக் டன் எடையுள்ள அந்தத் தரமான சந்தன மரத்தை முறைப்படி பெற்றுக்கொண்டு, அதற்கான மதிப்பான ரூ. 28 லட்சத்தை ‘மைசூர் சாண்டல் சோப்’ நிறுவனம் மூலம் கேசரியிடம் காசோலையாக வழங்கினர். மேலும், அந்த மரத்தை 40 ஆண்டுகள் நேர்மையுடன் பாதுகாத்து வளர்த்ததற்காகக் கர்நாடக அரசு அவருக்கு “சந்தன மகுட ரத்தினம்” என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
