CRIME
“நண்பர்கள் போல் பேசி மதுவிருந்து… போதையில் முகம் சிதைத்துக் கொலை…! பொன்னேரியில் பழிக்கு பழி வாங்கிய கொடூரம்..!!!”
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற வெல்டிங் தொழிலாளி, ஆரணியாற்று பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். வேலைக்குச் சென்றுவிட்டு வந்த அவர், இரவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரது உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தக் கொலைக்கான காரணம் முன்விரோதம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சின்னக்காவனம் பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்வில் ஏற்பட்ட தகராறில், தீபன் என்பவரின் நண்பர்களை சுனில் கத்தியால் தாக்கியுள்ளார். இதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன், தீபனும் அவரது நண்பர்களும் சுனிலிடம் நட்பாகப் பேசி, அவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர். சுனில் போதையில் இருந்தபோது, அவரை சரமாரியாக வெட்டியும், கத்தி, பீர் பாட்டில் மற்றும் கற்களால் முகத்தைச் சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
போலீசார் இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான தீபன் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை சுனிலின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் நண்பர்கள் போல் நடித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
