CRIME
பக்கத்து வீட்டுப் பெண்ணால் வந்த வினை…! வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சைப் பதறவைக்கும் மதுரை சம்பவதின் பின்னணி..!!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவரிடம், அனிதா என்ற பக்கத்து வீட்டுப் பெண், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வயதான பெண்ணைப் பராமரிக்கும் ஒரு வேலை இருப்பதாகக் கூறி ஒரு தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ளார். அந்த எண்ணில் பேசிய நபர்கள் மேலூருக்கு வந்தால் நல்ல ஊதியத்துடன் வேலை தருவதாகக் கூறியதை நம்பி, அந்தப் பெண் இரவு நேரத்தில் மேலூருக்குச் சென்றுள்ளார்.
மேலூருக்கு வந்த அந்தப் பெண்ணை 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்று, தாமரைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கண்மாய் அருகே இறக்கிவிட்டுவிட்டுத் தப்பியோடி உள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டு மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டாகப் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அவரிடமிருந்த அரை பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசு மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருட்களையும் அந்த கும்பல் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இக்குற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய தாமரைப்பட்டியைச் சேர்ந்த வினித், செல்வகுமார், அரவிந்த், வீரபாண்டி மற்றும் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 5 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
