CRIME
“24 மணி நேரம்.. 6 பிணங்கள்!”..நாட்டை உலுக்கிய ‘சைக்கோ’ கொலையாளி.. போலீஸ் தேடிய நிலையில் நேர்ந்த மர்ம முடிவு..!!
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் பகுதியில், 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ‘சைக்கோ’ கொலையாளி ராஜ்குமார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த இவர் மீது, 17 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த வாரம் அந்தச் சிறுமியின் தாய் மற்றும் ஒரு மூதாட்டியைக் கத்தியால் குத்திக்கொலை செய்த ராஜ்குமார், பின்னர் அந்தச் சிறுமியை ஏரிப் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்தார்.
அதோடு நிறுத்தாமல், தனது வீட்டுக்குச் சென்று தனது மனைவி சரிதா மற்றும் இரண்டு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவானார். இனையடுத்து இந்த சைக்கோ கொலையாளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், கொத்தூர் மண்டலத்தில் உள்ள ஒரு வெஞ்சர் பகுதியில் ராஜ்குமாரின் உடல் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது தேடப்பட்டு வந்த கொலையாளி ராஜ்குமார் என்பது உறுதியானது. அவரது சடலத்தின் அருகே விஷப் பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், போலீசாரின் தேடுதல் வேட்டைக்குப் பயந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
