CRIME
“10 வருஷப் பகை கடைசியில உயிரையே வாங்கிடுச்சு… மிளகாய்ப் பொடி தூவி கொடூரக் கொலை..! தெலங்கானாவில் கிளினிக்கிற்குள் புகுந்து மருத்துவரைச் சாய்த்த கும்பல்..!!”
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டம் பெண்டல்வெல்லி மண்டலத்தில், 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலத் தகராறு காரணமாக கிராமப்புற மருத்துவரான போஜினி மல்லையா என்பவர் அவரது கிளினிக்கிற்குள் புகுந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜூலை 31 இரவு 8 மணியளவில் கிளினிக்கில் நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த தாக்குதல்தாரிகள், முதலில் மருத்துவரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக வெளியே தெருவுக்கு இழுத்து வந்து, அனைவரும் பார்க்கும் வகையில் கத்தியால் கழுத்து மற்றும் தலையில் அடுத்தடுத்துக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கொலை செய்யப்பட்ட போஜினி மல்லையா பங்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்டல்வெல்லிக்கு வந்து தனது குடும்பத்துடன் குடியேறி, அங்கு ஒரு கிளினிக் தொடங்கி முதலுதவி சிகிச்சை அளித்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார். 2016-ஆம் ஆண்டிலிருந்து மல்லையாவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிங்கி கிருஷ்ணய்யா குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டு, மொத்தம் 14 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான சிவில் வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்த நீண்டகாலப் பகையே கொலையில் முடிந்துள்ளது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மருத்துவரின் மனைவி மலேம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுற்றுவட்டாரக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேக நபர்களான பிங்கி கிருஷ்ணய்யா, பிங்கி எள்ளம்மா மற்றும் பிங்கி நாகம்மா ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறப்படும் சேகர் என்பவர் தலைமறைவாக உள்ளதால், அவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
