CRIME
பகீர்..! விபத்து அல்ல… மாஸ்டர் பிளான்..! ரூ.44 லட்சத்திற்காக மனைவியை காவு வாங்கிய கொடூர கணவன்..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ரீட்டா என்ற பெண்ணின் மரணம், தொடக்கத்தில் சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்டாலும், 48 மணி நேரத்திற்குள் அது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. ஜூலை 29ஆம் தேதி இரவு மீட்டெடுக்கப்பட்ட சடலத்தின் அருகே கிடைத்த வங்கிக் கணக்குச் சீட்டு மூலம் சடலமாக இருந்தது ரீட்டா என்பது தெரியவந்தது. அவரது தந்தை இது விபத்து அல்ல எனப் புகார் அளித்தார். இதற்கிடையில், தன் மீது சந்தேகம் வராத வகையில் ரீட்டாவின் கணவர் அமர், தனது மனைவியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்து, பின்னர் உடலையும் அடையாளம் காட்டினார். ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கான்பூரில் வேலை செய்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்ட அமருக்கு இது மூன்றாவது திருமணம் என்பதும், இவர்களுக்குக் கணிசமான கடன்கள் இருந்ததும் காவல்துறையின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
கடன் சுமையைத் தீர்ப்பதற்காக, ரீட்டாவின் பெயரில் காப்பீட்டுத் திட்டம் எடுத்து, அவரைக் கொலை செய்து விபத்து போல் சித்தரிப்பதன் மூலம் 44 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெற அமரும் அவரது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். காப்பீட்டுத் தொகையில் அமருக்கு 15 லட்சம் ரூபாயும், மீதமுள்ள தொகையை மற்ற கூட்டாளிகளுக்கும் பிரித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. திட்டத்தின்படி, பௌதியா அருகே உள்ள பிரதான சாலைக்கு ரீட்டாவை அமர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காரில் காத்திருந்த கூட்டாளிகள் முதலில் காரால் ரீட்டாவை மோதியுள்ளனர். அதில் அவர் சாலையோர பள்ளத்தில் விழுந்ததும், அவரை வெளியே இழுத்து சாலையில் கிடத்தி, மீண்டும் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்புக் காட்சிகள் அடிப்படையில் விபத்து போல் சித்தரிக்கப்பட்ட இந்தக் கொலையை காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்தனர். இதையடுத்து, கணவர் அமர் மற்றும் அவரது கூட்டாளிகளான அமித் குப்தா, புஷ்பேந்திர சோனி, அபய் சிங் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். 44 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காகத் தன் காதல் மனைவியையே கணவர் திட்டமிட்டுக் கொலை செய்து விபத்தாக மாற்ற முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
