LATEST NEWS
“கப்பல் பாதுகாப்பாகக் கடந்துவிட்டது…” மெசேஜ் அனுப்பிய சில நிமிடங்களில்.. இந்திய மாலுமிக்கு நேர்ந்த சோகம்..!!!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஓமன் நாட்டு கடற்கரைக்கு அருகே ‘GFX கேலக்ஸி’ என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், புனேயைச் சேர்ந்த 30 வயதான இந்திய மெரைன் இன்ஜினியர் ஹெரம்ப கர்மார்கர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், ஆபத்தான பகுதியைக் கடந்துவிட்டதாக நினைத்து, “கப்பல் பாதுகாப்பாகக் கடந்துவிட்டது” என்று தனது குடும்பத்தினருக்கு அவர் வாட்ஸ்அப் மூலம் கடைசி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் நடந்த இந்தத் கொடூரத் தாக்குதல் அவரது உயிரைப் பறித்துள்ளது.
சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் மொத்தம் 11 இந்திய மாலுமிகள் இருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு கடலில் காணாமல் போன ஹெரம்ப கர்மார்கரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். கப்பலில் இருந்த மற்ற 10 இந்திய மாலுமிகள் ஓமன் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது, உயிரிழந்த கர்மார்கரின் உடலை எவ்வித சேதமுமின்றி முழுமையாகத் தங்களது சொந்த ஊருக்குக் கொண்டு வர இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் இதர உதவிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேசக் கடல் வணிகத்திலும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
