LATEST NEWS
“கேட்ட கேள்வி ஒண்ணு… சொல்ற பதில் ஒண்ணு..!” தவெக அரசின் பதிலால் கடுப்பாகி சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக..!!
சட்டமன்றத்தில் தவெக அரசு 100 நாட்களைக் கடந்ததைக் குறித்து அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் புகழ்ந்து பேசியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஏராளமான கொலைகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். குறிப்பாக, கோவையில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவர் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இச்சம்பவத்தைக் கல்வித்துறை அமைச்சர் ‘கோஷ்டி பூசல்’ எனக் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், போதைப்பொருள் குறித்து தகவல்களைத் தந்த அமுதனின் விவரங்களைக் காவல்துறையினர் குற்றவாளிகளிடம் கசியவிட்டதே அவரின் மறைவுக்குக் காரணம் என அமுதனின் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் கூறுவதாகத் தெரிவித்தார். மேலும், இக்கொலையைக் கண்டித்து திமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், சென்னை திருவொற்றியூர் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் தனுஷ் கொல்லப்பட்டது, காஞ்சிபுரத்தில் சந்துரு மற்றும் விக்கி, பல்லடத்தில் தாய்-மகள் இரட்டை கொலை, அம்பத்தூரில் வைதேகி, குடியாத்தத்தில் பெண் தலைமை காவலர் தாமரைச் செல்வி மற்றும் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை வரிசைப்படுத்தி, போதைப்பொருள் தடுப்புப் படையின் கள நிலவரத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெகவின் இந்த 100 நாள் ஆட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் என்றும், உயிரிழந்த தனுஷ் மற்றும் அமுதன் ஆகியோரைத் தங்கள் குடும்பமாகவே கருதுவதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஆட்சியில் அமர்ந்ததும் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான ‘Anti-Narcotics Task Force’ அமைப்பிற்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 65 பிரிவுகள் உருவாக்கப்பட்டு போதைப்பொருளை வேரறுக்க அரசு உறுதியுடன் இருப்பதாகக் கூறினார். தொடர்ந்து பேசுகையில், 2020-க்கு முன்பு இந்த போதை கலாச்சாரம் இல்லை எனக் கூறியதற்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கவே, “உண்மை இருந்தால் அமைதியாக இருப்பார்கள், பயம் வந்தால்தான் கத்துவார்கள்” என்று பதிலடி கொடுத்தார். மேலும், போதை கலாச்சாரத்தால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதை 2020 முதல் உயர்ந்து வரும் போக்ஸோ வழக்கின் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய அவர், 2.5 வயது பெண் குழந்தை பலியான சம்பவத்தில் தொடர்புடைய திமுக உறுப்பினரின் புகைப்படத்தை அவையில் காட்டி, போதை பழக்கத்திற்கு அடித்தளமிட்டதே திமுகதான் என்று குற்றம்சாட்டினார். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய சட்டஒழுங்கு பிரச்சினைகளுக்குப் பதிலளிக்காமல் கடந்த ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுவதாகச் சாடினார். தவெக அமைச்சர் ஒருவர் போதைப்பொருள் உபயோகித்த வீடியோவை இந்தியாவே பார்த்ததாகவும், முந்தைய ஆட்சியில் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அமல்ராஜ் IPS-ஐ தற்போதைய சென்னை மாநகர ஆணையராக நியமித்ததைச் சுட்டிக்காட்டியும் கேள்வி எழுப்பினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போதைப்பொருள் தடுப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்துக் கேள்வி எழுப்பியபோது, “போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவலர்களுக்குக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் விருது வழங்கினார், எங்கள் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்றால் எதற்காக அந்த விருது?” என்று உதயநிதி ஸ்டாலின் வினா எழுப்பினார். இறுதியாக, சட்டத்துறை அமைச்சர் சட்டஒழுங்கு பிரச்சினைகள் குறித்துப் பேச மறுப்பதாகவும், திமுக எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறி திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
