LATEST NEWS
CJP செயற்பாட்டாளரின் தந்தை கொலை… பாஜக நிர்வாகி கைது… பள்ளி உள்கட்டமைப்புப் பிரச்சனையில் வெடித்த மோதலின் பின்னணி என்ன..?!
கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்தது கரப்பான் பூச்சி மக்கள் கட்சி எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தங்களின் இரண்டாவது முக்கிய நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து குரல் எழுப்பப் போவதாக CJP அறிவித்தது. இதற்காக ‘School Thik Karo’ என்ற பெயரில் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், CJP-யின் நடவடிக்கைகளைத் தடுக்க பல்வேறு முயற்சிகளில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தானில் வெளிநபர்கள் உரிய அனுமதியின்றி பள்ளிகளுக்குள் செல்லக் கூடாது என அவசர அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது பள்ளி செயல்பாடுகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது, நேர்காணல்கள் நடத்துவது, ஒலிப்பதிவு செய்வது மற்றும் நேரலை ஒளிபரப்பு செய்வது ஆகியவற்றுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தின் ஒரு சிறிய கிராமப்புற தொடக்கப் பள்ளியில், “குடிநீர் சுத்தமாக இருக்கிறதா? கழிப்பறைகள் முறையாக இயங்குகின்றனவா? மாணவர்களுக்கு என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன?” எனக் கேள்வி எழுப்பிய 27 வயது CJP செயற்பாட்டாளர் ஷேக் அப்துல் ஹஃபீஸ் மீது 48 மணி நேரத்திற்குள் கொலை முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வன்முறையாளர்களிடமிருந்து மகனைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை ஷேக் முகமது மாஃபிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாஜக பூத் நிலைத் தலைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவத்திற்கும் பாஜகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், CJP நிறுவனர் அபிஜீத் திப்கே இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, வன்முறைகளுக்கு அஞ்சாமல் தங்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
