LATEST NEWS
“எல்லாத்துக்கும் சிஎம் தான் பதிலா…?” ஒவ்வொரு துறைக்கு எதுக்கு மினிஸ்டர்…? மழுப்பலாகப் பேசிப் பத்திரிகையாளர்களைத் தவிர்த்த அமைச்சர் ஆனந்த்…. அரசியல் களத்தில் பரபரப்பு…!!
தமிழகத்தில் அண்மைக் காலமாகச் சிறுமி மற்றும் மூதாட்டி பாலியல் வன்கொடுமைகள், காவலரால் நேர்ந்த அத்துமீறல் மற்றும் இளம்பெண் கொலை போன்ற தொடர் குற்றச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் புதிய அரசு எடுத்து வரும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளிக்கத் தயங்கிய அமைச்சர் ஆனந்த், அங்கிருந்த ஒரு பெண்ணிடம் நலம் விசாரிப்பது போலப் பாசாங்கு செய்து நைசாக அவ்விடத்தை விட்டு நழுவினார்.
இதேபோல், கூட்டுறவுத் துறை கிடங்குகளில் ஆய்வு செய்த அமைச்சர் காந்திராஜிடம் அங்குள்ள குறைபாடுகள் குறித்துக் கேட்டபோது, எல்லாவற்றிற்கும் முதலமைச்சர் விஜய் தான் விளக்கமளிப்பார் எனக் கூறிவிட்டு மழுப்பலாக நகர்ந்தார். இது, “அனைத்திற்கும் முதலமைச்சரே பதிலளிப்பார் என்றால் தனித்தனித் துறைகளுக்கு அமைச்சர்கள் எதற்கு?” என்ற கடுமையான விமர்சனத்தை ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
அமைச்சர்களின் இத்தகைய மழுப்பல் போக்கு இது முதன்முறையல்ல; கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலைக்குக் காவி ஆடை போர்த்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தபோதும், அதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.
மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளான சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் சமூகப் பதற்றங்கள் குறித்துப் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் தொடர்ந்து ஊடகங்களைச் சந்திக்காமல் ஓடி ஒளிர்வது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழித்துத் தலைமறைவாவது போன்ற இத்தகைய செயல்பாடுகள் அடங்கிய வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி, மக்கள் மத்தியில் புதிய தவெக அரசு மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது.
