CRIME
“மீண்டும் வாழலாம் வா..! இன்ஸ்டா ரீல்ஸில் சிரித்த சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்..! ஆடு மேய்ப்பவரால் அம்பலமான ரகசியம்..!!”
பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ் என்ற பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் இணைந்து வாழலாம் என ஆசைவார்த்தை கூறி குர்மீத் அவரை அழைத்துள்ளார். கொலை நடப்பதற்கு சற்று முன், இருவரும் இணைந்து எடுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சரோஜை நம்பவைத்து தனியான இடத்திற்கு அழைத்துச் சென்ற குர்மீத், ஜண்ட்வாலா மீரா சங்கலா கிராமத்திலுள்ள புதர்களுக்கு அருகே கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். பின்னர் ஆதாரங்களை அழிப்பதற்காக, அவரது உடலை வயல்வெளியில் குழிதோண்டி புதைக்க முயன்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் சரோஜின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு ஓடிவந்துள்ளார்.
யாரோ வருவதைக் கண்ட கொலையாளி அரைகுறையாக உடலை மூடிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். ஆடு மேய்த்தவர் அளித்த தகவலின் பேரில் கிராம மக்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான குர்மீத் சிங்கை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
