LATEST NEWS
ஆத்தாடி..! படிக்கட்டில் நைஸா பதுங்கிய 6 அடி முதலை… அலறி அடிச்சு ஓடிய பெண்…! பத்திரமாக மீட்டுச் சம்பல் ஆற்றில் விட்ட வனத்துறை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்கர் பகுதியில், வீட்டின் படிக்கட்டில் பிரம்மாண்டமான முதலை ஒன்று அமர்ந்திருந்ததைக் கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்ததும் கிராம மக்கள் அங்கு பெருமளவில் திரண்டனர். பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முதலையைப் பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள சம்பல் நதியில் விட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நாராயண்கர் பகுதியைச் சேர்ந்த டென்ட் வியாபாரியான ஷைலேந்திர படிதார் என்பவரின் மனைவி, காலையில் மேல் தளத்தில் உள்ள சமையலறைக்குத் தேனீர் தயாரிக்கச் சென்றபோது, படிக்கட்டில் 6 அடி நீள முதலை அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார். மனைவியின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த ஷைலேந்திர படிதாரும் படிக்கட்டில் முதலையைப் பார்த்து உறைந்துபோனார். இதையடுத்து உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.
வனத்துறை ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் கவனமாகப் போராடி முதலையைக் கட்டுப்படுத்தி மீட்டனர். பின்னர் அந்த முதலை பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு அருகில் உள்ள சம்பல் நதியில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, குடும்பத்தினரும் கிராம மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தற்போது மந்தசூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடித்து வரப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
