LATEST NEWS
“எஃப்.ஐ.ஆர்-ல என் பெயரே இல்லை..!” காவல் நிலைய வாசலில் செந்தில் பாலாஜி வைத்த அதிரடி வெடி.. சூடான தமிழக அரசியல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்திருந்தார். கையெழுத்திடும் நடைமுறைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க கால அவகாசம் கோரப்பட்டதாகவும், தற்போது நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், காவல்துறையினர் பதிவு செய்த தொடக்க எஃப்.ஐ.ஆர்-இல் தனது பெயரோ அல்லது தனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ இடம்பெறவில்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன் என்று உறுதியளித்த செந்தில் பாலாஜி, மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் சாடினார். த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது குறிப்பிடத் தக்கது. அதனடிப்படையில், அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு விளக்கமளித்து வருகிறார்.
