LATEST NEWS
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியா…திமுகவின் ஜென் சி மீட்டிங்…திமுகவின் 2கே கிட்ஸ் மீட்டிங்கிற்கு செக் வைத்த விஜய்… 16 வயது சிறுவர்களை குறிவைக்கும் தவெக-வின் மாஸ்டர் பிளான்…!
அண்மையில் திமுக நடத்திய ‘ஜென் சி’ (Gen Z) மற்றும் 2கே கிட்ஸ் மீட்டிங், தமிழக அரசியலில் இளைய தலைமுறை வாக்காளர்களின் முக்கியத்துவத்தை அந்த கட்சி உணர்ந்திருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் ஆகப்பெரும் பலமே இந்த ஜென் சி மற்றும் ஜென் ஆல்பா (10 முதல் 16 வயதுடைய) கிட்ஸ் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய தலைமுறைக்கு நீளமான கட்டுரைகளைப் படிக்கவோ, மணி கணக்கில் மேடைப் பேச்சைக் கேட்கவோ பொறுமை கிடையாது; அவர்களுக்குத் தேவை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் மட்டுமே. இதில் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் ஸ்டைல், நடனம் மற்றும் பஞ்ச் வசனங்கள் மிக எளிதாக அவர்களைச் சென்றடைந்துள்ளன. பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது இயல்பான விமர்சனத்தைக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் திமுகவைப் பற்றி வரும் பொதுவான எதிர்மறை விமர்சனங்களை எளிதில் நம்புகின்றனர். உதாரணமாக, கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தின் போது, ஸ்டாலின் நேரில் சென்றும் கூட, அது சமூக ஊடக பிம்பங்களால் திமுகவிற்கு எதிராகவே மாறியது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய், 1996-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ மட்டுமின்றி, தங்களைக் காக்கும் ‘ரட்சகனாகவும்’ காட்சிளிக்கிறார். பல ஆண்டுகளாக திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியலையே பார்த்து பழகிய இளைய தலைமுறைக்கு, விஜய் ஒரு புதிய மற்றும் கவர்ச்சிகரமான மாற்றாகத் தெரிகிறார். திராவிட இயக்கத்தின் ஆகப்பெரும் பலமே அதன் ‘கருத்தியல்’ (Ideology) தான் என்றாலும், இன்றைய தலைமுறையினரிடம் கருத்தியல் ரீதியாகப் பேசி கவருவது மிகக் கடினம். இதனை உணர்ந்துகொண்டே திமுகவும் தன் பாணியை மாற்றி ரீல்ஸ், மீம்ஸ்கள் மூலம் தங்களை ‘கூல்’ ஆகக் காட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக வாரிசு அரசியல் உள்ளிட்ட பிம்பங்களை விதைத்து வென்றதைப் போல, இங்கும் திமுகவிற்கு எதிராகப் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பிம்பங்கள் மற்றும் வாரிசு அரசியல் விமர்சனங்கள் தவெக-விற்குச் சாதகமாக அமைந்துள்ளன.
இருப்பினும், கருத்தியல் ரீதியாகக் கவர முடியாவிட்டாலும், ‘புதுமைப் பெண்’ திட்டம் (மாணவிகளுக்கு ரூ.1000), ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் போன்ற நலத்திட்டங்கள் மூலம் இந்த இளைஞர்களின் குடும்பங்களை நோக்கி திமுக காய் நகர்த்தி வருகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் திமுகவின் உறுதியான வாக்காளர்களாக மாறுவார்களா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. விஜய் ரசிகர்களாக இருக்கும் இந்த 16-18 வயது இளைஞர்கள், இன்னும் சில ஆண்டுகளில் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது தங்களின் ‘சினிமா ரசனையை’ தள்ளிவைத்துவிட்டு, ‘அரசியல் முதிர்ச்சியோடு’ வாக்களிப்பார்களா அல்லது விஜய்யின் தனிப்பட்ட ஈர்ப்பால் வாக்களிப்பார்களா என்பதைப் பொறுத்தே தமிழக அரசியலின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். இதுவே தொடர்ந்தால் வரும் 2031 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு கடுமையான சவாலாக முடியும் என அரசியல் விமரிசகர்கள் கணிக்கின்றனர்.
