LATEST NEWS
இது என்ன பித்தலாட்டமா இருக்கு…! 45 லிட்டர் டேங்கிற்கு 52 லிட்டர் பெட்ரோல்… பில்லை பார்த்து மிரண்டு போன வாலிபர்… நூதன மோசடியால் பரபரப்பு…!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் ஹர்ஷ் நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையத்தில் விசித்திரமான மோசடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சரண் சிங் என்பவர் தான் புதிதாக வாங்கிய ‘வோக்ஸ்வாகன் விர்டஸ்’ சொகுசு காரில் எரிபொருள் நிரப்பச் சென்றுள்ளார். அந்த வாகனத்தின் அதிகபட்ச எரிபொருள் கொள்ளளவு 45 லிட்டர் மட்டுமே என்றும், ஏற்கனவே அதில் சில லிட்டர் பெட்ரோல் இருப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், காரின் மொத்தக் கொள்ளளவை விடக் கூடுதலாக, 52 லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் ரசீது வழங்கியதால் காரின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஊழியர்களிடம் கேட்டபோது, பெரிய அளவில் எரிபொருள் நிரப்பும்போது இரண்டு தவணைகளாகத்தான் போடுவோம் என்று மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாகப் புகார் அளித்தார். அதன்பேரில் வந்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட சோதனையில், எரிபொருள் வழங்கும் இயந்திரத்தில் பெரிய தொழில்நுட்பக் கோளாறுகள் எதுவும் உடனடியாகத் தென்படவில்லை என்றும், நிறுவனங்கள் குறிப்பிடும் அளவை விடக் குழாய்ப் பகுதிகளில் சிறிதளவு கூடுதல் எரிபொருள் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக டிஜிட்டல் மீட்டரில் ஏதேனும் சிப் (Chip) முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். வாகனத்தின் கொள்ளளவை விட பெட்ரோல் பில் அதிகமாக வந்த இந்த விவகாரம், நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடையே தற்போதைய சூழலில் பெரும் விவாதத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
