LATEST NEWS
“அதிகாரிகளின் ஒற்றை அலட்சியம்.. பறிபோகிறதா நூற்றுக்கணக்கானோரின் பணி வாழ்க்கை…என்பிஎஸ்சி வரலாற்றிலேயே இப்படி ஒரு குளறுபடியா…டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்…வைரலாகும் பதற்றமான வீடியோ…!”
திருவள்ளூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை மாறுதல், பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே 30 முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. இதில் திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், நேற்று நடைபெற்ற தேர்வின் போது அதிகாரிகளின் அலட்சியத்தால் வினாத்தாள்கள் மாறி விநியோகிக்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ‘தி அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப் ஆர்டினேட்’ (வினாத்தாள் எண் 137) மற்றும் ‘தி அக்கவுண்ட் டெஸ்ட் பார் எக்ஸிக்யூட்டிவ் ஆபீசர்’ (வினாத்தாள் எண் 152) ஆகிய இரு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தேர்வர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவடைந்த பின்னரே இந்த விபரீத குளறுபடி தேர்வர்களுக்குத் தெரியவந்தது. இதனால் தங்களின் வாழ்நாள் உழைப்பும், பதவி உயர்வு வாய்ப்புகளும், பணிவாழ்க்கை முன்னேற்றமும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்று உணர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வினாத்தாள் குளறுபடி குறித்துக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து நழுவ முயன்ற அதிகாரியைத் தடுத்து நிறுத்தித் தங்களது வாழ்வாதாரக் கேள்விகளால் திணறடித்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இறுதியாக, தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் இத்தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிப்புகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யே பொறுப்பேற்கக் கோரியும் தங்களது புகார்களை மனுவாக அளித்துக் கலைந்து சென்றனர்.
