LATEST NEWS
“அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த தவெகவினர் செய்த பகீர் காரியம்.. அமைச்சர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நிர்வாகிகள்.. வெடித்தது பெரும் சர்ச்சை”..!!
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திடீரென அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்துள்ளனர். தவெக ஒன்றிய கழகச் செயலாளர் வேங்கைவாசல் டி.ராஜன், இணைச் செயலாளர் எஸ்.மணிதுணைச் செயலாளர் ஏ.விஜய், பொருளாளர் மோ.மணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இவ்வாறு உள்ளே புகுந்து, அங்கே ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். கல்வி கற்கும் இடத்தில் பொறுப்பற்ற முறையில் நடத்தப்பட்ட இந்தச் செயல் தற்போது பொதுமக்களிடையேயும் கல்வி வட்டாரத்திலும் கடுமையான சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.கையில் தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படத்துடன் நுழைந்த அவர்கள், அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்குப் பல்வேறு பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து மாணவர்களிடம், “இவர் தான் நம்ம CM விஜய் மாமா” என்று கூறி, பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலையிலேயே முதல்வர் விஜய்யின் புகைப்படத்தைச் சுவரில் மாட்டியுள்ளனர். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் தங்களது செல்போன்களில் ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்த தவெகவினர், அதனைத் தாங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குள் தவெகவினர் அத்துமீறிச் சென்று ஆய்வு செய்வதோ, மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதோ போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் தான் அறிக்கை வாயிலாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சரின் அந்த உத்தரவையும் மீறி, தவெகவினர் மீண்டும் ஓர் அரசுப் பள்ளிக்குள் நுழைந்து இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பள்ளிக்குள் அத்துமீறிய தவெக நிர்வாகிகள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
