CINEMA
பழைய கசப்பான சம்பவத்தை வைத்து வியாபாரமா?…பாலிவுட்டில் அடுத்த சட்டப் போராட்டம்…பிரபலங்களின் பர்சனாலிட்டி ரைட்ஸ்.. சல்மான் கான் அனுப்பிய நோட்டீஸால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் கிளம்பிய பரபரப்பு…!”
பாலிவுட் நடிகர் சல்மான் கான், ‘காலா ஹிரன்’ (Kala Hiran) என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் திலீப் சிங் பாகேலுக்கு அதிரடியாகச் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சல்மான் கானின் வழக்கறிஞர்களான ‘DSK லீகல்’ தரப்பு, இந்தத் திரைப்படத்தின் தலைப்பு கடந்த 1998-ம் ஆண்டு நடந்த கலைமான் வேட்டை வழக்கை நேரடியாகக் குறிப்பிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஒருவருடைய அனுமதி இன்றி அவரது தனிப்பட்ட ஆளுமை உரிமைகளையும் (Personality Rights), நற்பெயரையும் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், கடந்த கால கசப்பான சம்பவங்களை வைத்து ஆதாயம் தேட முயல்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கை என்றும் சல்மான் கான் தரப்பு வாதாடுகிறது.
சல்மான் கானின் இந்தச் சட்ட நடவடிக்கைக்குத் தயாரிப்பாளர் திலீப் சிங் பாகேல் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார். தனது ‘காலா ஹிரன்’ திரைப்படம் சல்மான் கானைக் குறிவைத்து எடுக்கப்படவில்லை என்றும், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கப் பிஷ்னோய் சமூகத்தினர் மேற்கொள்ளும் உன்னத முயற்சிகளை மையமாகக் கொண்டது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கலைமான் என்பது பலருக்குப் புனிதமான விலங்கு என்று குறிப்பிட்ட அவர், விளம்பரத்திற்காகவோ அல்லது லாப நோக்கோடோ இந்தத் தலைப்பை வைக்கவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் சல்மான் கானின் தனிப்பட்ட உரிமைகளுக்கு ஆதரவாகப் பேச, மற்றொரு தரப்பினரோ வரலாற்றுச் சம்பவங்களைச் சித்தரிக்கப் படைப்பாளிகளுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என வாதிடுகின்றனர். ஏற்கனவே பாலிவுட்டில் ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘மெயின் அடல் ஹூன்’ போன்ற திரைப்படங்கள் இது போன்ற சட்டப் போராட்டங்களைச் சந்தித்துள்ளன. 1998-ம் ஆண்டு நடந்த கலைமான் வேட்டை வழக்கு இன்றும் சல்மான் கானுக்கு ஒரு சென்சிட்டிவான விஷயமாகவே இருந்து வரும் சூழலில், இந்தச் சட்ட மோதலின் இறுதித் தீர்ப்பு, எதிர்காலத்தில் பிரபலங்களின் தனிப்பட்ட ஆளுமை உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
