CINEMA
வாக்காளர்களைக் கேவலப்படுத்தாதீங்க…ராகவா லாரன்ஸுக்கு எதிராகப் பொங்கித் தீர்த்த இயக்குநர் சேரன்…மக்களை இப்படிச் சித்தரிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது? …லாரன்ஸை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்…!
நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கருத்து, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “புதிதாக ஒரு வீட்டிற்குச் சென்று குடியேறினால், அங்கு தெருவில் இருக்கும் நாய்கள் கூட நம்மைப் பார்த்துக் குறைக்கும். ஒரு சில நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி தான் சாப்பிடும். அதற்குப் பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கே இப்படி என்றால், நாட்டையே நம்பி ஒருவரிடம் கொடுத்து இருக்கும் போது அவர்களுக்குக் கால அவகாசம் கொடுங்கள்” என லாரன்ஸ் பேசியிருந்தார். லாரன்ஸின் இந்த விசித்திரமான ஒப்பீட்டுப் பேச்சு, வாக்களித்த பொதுமக்களை இழிவுபடுத்துவது போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், லாரன்ஸின் இந்த கருத்துக்குத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சேரன் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் மிகக் காரசாரமான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்… உங்கள் சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெரு நாயாகச் சித்தரிப்பதையும், பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களைக் குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி, ஒரு வாக்காளனின் உணர்வைக் கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூட வேண்டும் என்று லாரன்ஸ் கூறுவது, அவரின் மனிதாபிமானத்தின் மீதே சந்தேகம் கொள்ளச் செய்வதாகவும், தான் ‘பிஸ்கட், பிரியாணிக்காகக் கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்’ என்றும் சேரன் தனது ஆதங்கத்தைப் பொங்கித் தீர்த்துள்ளார்.
இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமாக வெடித்ததை உணர்ந்த நடிகர் ராகவா லாரன்ஸ், உடனடியாகத் தனது எக்ஸ் தளத்தில் இதற்கு விளக்கமளித்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஒரு புதிய சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பழகுவதற்கு நேரம் தேவைப்படும் என்பது பற்றித்தான் நான் பேசினேனே தவிர, மக்களைக் குறித்து நான் அவ்வாறு தவறாகக் குறிப்பிடவில்லை. தயவுசெய்து அந்த முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று நழுவல் விளக்கம் கொடுத்துள்ளார். இருப்பினும், வாக்காளர்களை மறைமுகமாகத் தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய லாரன்ஸின் பேச்சுக்கு எதிரான சமூக வலைத்தள விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
