LATEST NEWS
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைக்கும் விஜய்.. முன்ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய திட்டம்..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!
தவெக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து அவரை மீண்டும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜாவைத் தொடர்புகொண்ட சிலர், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது கட்சி மாறி வாக்களிக்க ₹35 கோடி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். மேலும், அதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டியதாகவும் சென்னை-திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விசாரணையில் கைதானவர்களுக்குப் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் செயல்பட்டதாகக் காவல்துறை தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதையடுத்து கைது நடவடிக்கைக்கு அஞ்சி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றது. ஆனால், விசாரணை அதிகாரி முன்னிலையில் தினமும் இருவேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனையை அவர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், நீதிமன்ற உத்தரவை மீறிய காரணத்தின் அடிப்படையில் அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகக் காவல்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
