CINEMA
கேரளாவை உலுக்கிய பச்சிளம் குழந்தை கொலை…இதயத்தை நொறுக்கும் கற்பனைக்கு எட்டாத துயரம்…பெற்ற தாயின் செயலால் கண்ணீர் மல்கிய பாடகி சித்ரா மற்றும் விஜய் ஆண்டனி…!
மனிதநேயமே மரணித்துப் போய்விட்டதா என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் கேள்வி கேட்கத் தூண்டும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணின் கணவர் கடந்த 2024-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் அஷ்கர் என்ற தனது காதலனுடன் ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை அர்ஷித்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். கடந்த மே 29-ம் தேதி, குழந்தை சாப்பிடும்போது திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. தொண்டையில் உணவு சிக்கியதால் தான் குழந்தை மயங்கியது என அஷ்கர் கூறியதை நம்பாத மருத்துவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்கள் மருத்துவர்களையும் போலீசாரையும் உறைந்துபோகச் செய்தன. அந்தப் பச்சிளம் குழந்தையின் உடலில் சிகரெட் சூடு வைக்கப்பட்ட தழும்புகளும், தலையைச் சுவரிலோ அல்லது தரையிலோ பலமாக மோதியதால் ஏற்பட்ட காயங்களும் என மொத்தம் 51 சித்திரவதைக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்ற தாயும் அவளது காதலனும் சேர்ந்தே இந்தக் கொடூரத்தைச் செய்தது அம்பலமானதை அடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பாவிப் பிஞ்சு என்றும் பாராமல் நடத்தப்பட்ட இந்த மிருகத்தனமான கொலைச் சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ரா மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் தங்களது வேதனையை உருக்கமாகப் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து பாடகி சித்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “வெறும் ஒன்றரை வயதே ஆன அர்ஷித் மகனின் மறைவுச் செய்தி நெஞ்சைப் பிழிகிறது; இத்தகைய கொடூரங்கள் இனி நிகழாதிருக்க மனித சமூகம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளட்டும்” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல், நடிகர் விஜய் ஆண்டனி, “அமைதியாய் இளைப்பாறு தங்கமே; இதயத்தை நொறுக்கும், கற்பனைக்கும் எட்டாத துயரம் இது” எனத் தனது பதிவில் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.
