LATEST NEWS
ஐபிஎல் போட்டியை குறிவைத்த கும்பல்… நாடு முழுவதும் 8,750 இணையதளங்களை முடக்கிய மத்திய அரசு…. அதிரடி நடவடிக்கை…!!
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, விதிமுறைகளுக்குப் புறம்பான சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகப் பொதுமக்களிடம் பெரிய அளவில் பண மோசடி நடைபெறுவதாகச் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மே 31-ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியைக் குறிவைத்து நாடு தழுவிய அளவில் மாபெரும் சூதாட்ட வலைப்பின்னல் செயல்படுவதைக் கர்நாடக மாநிலப் போலீசாரும் மத்தியக் குற்றப்பிரிவினரும் தீவிரக் கண்காணிப்பின் மூலம் கண்டறிந்தனர்.
இந்தச் சட்டவிரோதத் தளங்கள் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கும் நோக்கில் இயங்கி வந்ததை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர், அவற்றை முற்றிலுமாக முடக்கக் கோரி உரிய ஆதாரங்களுடன் மத்திய அரசுக்குப் பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பினர். கர்நாடகக் காவல் துறையினரின் இந்த அவசரப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசத்தின் பாதுகாப்பைக் கருதி அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
அதன்படி, நாடு முழுவதும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த சுமார் 8,750 சூதாட்ட வலைத்தளங்களை ஒரே நேரத்தில் முடக்கி மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் போது அரங்கேறவிருந்த பிரம்மாண்ட பண மோசடியைத் தடுத்து நிறுத்திய மத்திய அரசின் இந்தத் துரிதமான நடவடிக்கை, இணையவழிச் சூதாட்டக் கும்பல்களுக்குப் பெரும் முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளதுடன் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
