LATEST NEWS
அரசு மருத்துவமனையில் இப்படியொரு கொடூரமா…மூக்கு அறுவை சிகிச்சைக்கு போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…உயிரைக் குடித்த ‘டெக்சாமெதாசோன்’! தமிழ்நாடு முழுக்கப் பறந்த அவசர உத்தரவு! பதறிப்போன மருத்துவத்துறை…!
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்ததால், இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூக்கு அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் திடீரென மரணமடைந்ததால், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் எனக்கூறி அவரது பெற்றோர் மற்றும் சக செவிலிய மாணவிகள் மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டது.
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், இஎன்டி மருத்துவர் பாரதி மோகன், மயக்கவியல் மருத்துவர் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட ‘டெக்சாமெதாசோன்’ (Dexamethasone) என்ற தரமற்ற மருந்தே மாணவியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என ஆய்வறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தேவைக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் மரணம் நிகழ்ந்தது என்ற ஆரம்பக்கட்ட சந்தேகங்களுக்கு மத்தியில், இந்த தரமற்ற மருந்து விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விபரீதத்தைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த ‘பேட்ச்’ (Batch) மருந்தை உடனடியாக சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த குறிப்பிட்ட பேட்ச் கொண்ட மருந்துகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், அவற்றை ஆய்வக சோதனைக்கு அனுப்பவும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையிலேயே தரமற்ற மருந்து உயிரிழப்பை ஏற்படுத்திய விவகாரம் ஒட்டுமொத்த மருத்துவத்துறை வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
