CINEMA
ஏவிஎம் கேட்டில் நடந்த அந்த அவமானம்…கல்லைக்கூட நடிக்க வைக்கும் வித்தைக்காரர்! ’16 வயதினிலே’ முதல் ‘கோட்…நான்கு சுவற்றுக்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கு மாற்றிய மாமேதை… பாரதிராஜா என்னும் சகாப்தம் முடிந்தது…!
தமிழ் திரையுலகின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் மறைந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்; அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா நுணுக்கங்களைக் கற்ற பாரதிராஜா, ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதுவரை நான்கு சுவற்றுக்குள்ளும் செட்டுகளுக்குள்ளும் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும் மண் வாசனைக்கும் அழைத்து வந்த பெருமை இவரையே சாரும்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த ’16 வயதினிலே’ திரைப்படம் மெகா பிளாக் பஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, பாரதிராஜாவின் இயக்கத்திற்குத் தனி மவுசு உருவானது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என அவரது பெரும்பாலான படங்கள் வரிசையாக மெகா ஹிட் அடித்ததால், திரையுலகில் அவர் ‘இயக்குநர் இமயம்’ என்ற உச்சத்திற்கு உயர்ந்தார். “பாரதிராஜா நினைத்தால் ஒரு கல்லைக்கூட நடிக்க வைத்துவிடுவார்” என்று சொல்லுமளவிற்கு நடிகர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவரான அவர், எக்கச்சக்கமான புதுமுக திறமையாளர்களைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தார். வயோதிகம் காரணமாகப் பிற்காலத்தில் சிறந்த நடிகராகவும் வலம் வந்து முத்திரை பதித்தார்.
அவரது அசாத்தியமான திரையுலகப் பயணத்தின் பின்னணியில் ஒரு சுவாரசியமான அவமானமும் வைராக்கியமும் ஒளிந்திருக்கிறது. சினிமா வாய்ப்புத் தேடிய ஆரம்பக் காலத்தில், ஏவிஎம் ஸ்டூடியோவில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் திரையிடலுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒருவரால் சட்டையைப் பிடித்து கேட் வரை இழுத்துச் சென்று வெளியே தள்ளப்பட்டார் பாரதிராஜா. கண்கள் கலங்கிய அந்தத் தருணத்தில், “இதே ஏவிஎம் நிறுவனம் என்னை தேடி வந்து அழைக்குமளவிற்கு என் ஆற்றலை வளர்த்துக் கொள்வேன்” என சபதமேற்றார். சொன்னபடியே, பின்நாட்களில் அதே ஏவிஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘புதுமைப் பெண்’ திரைப்படத்தை இயக்கி, அவமானப்படுத்திய இடத்திலேயே இமயமாக உயர்ந்து நின்றார் பாரதிராஜா. அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
