CINEMA
“உங்களுக்குத் தெரியுமா, எனக்குத் தெரியுமா?” பூர்ணிமா அக்கா பற்றி…. விமர்சித்த நெட்டிசனை வறுத்தெடுத்த நடிகை குஷ்பு…!!
பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியினரின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில், பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் தனது மனைவியுடன் இத்திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு ஜூன் 26 அன்று சென்னை திரும்பினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அடுத்த நாள் காலை நடைபயிற்சி முடித்து வந்த பாக்யராஜிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
பாக்யராஜின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமும், திரைத்துறையும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது கணவருடன் மகள் திருமணத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “மாநிலமே கே.பாக்யராஜ் மறைவிற்குத் துக்கம் அனுசரித்து வரும் இந்த நேரத்தில், இந்த பதிவு உங்களுக்கு உண்மையில் தேவையா?” என்று கமெண்ட் செய்து குஷ்புவைக் கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது.
நெட்டிசனின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு நடிகை குஷ்பு தனது பாணியில் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “அப்படியென்றால் ஏன் என்னை பின்தொடர்கிறீர்கள்? விமர்சிப்பதற்காக மட்டுமா? என் மகளுக்கு 46 மணி நேரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. மேலும், பூர்ணிமா அக்காவை யாருக்கு நன்றாகத் தெரியும்? உங்களுக்கா, எனக்கா? என் பதிவு உங்களுக்குக் கடினமாக இருந்தால் என்னை பின்தொடர்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
