CINEMA
ஒரே நாளில் தவெக கோட்டைக்குள் நுழைந்த ரவி மோகன் – குஷ்பு!விவாகரத்து கண்ணீர் டூ விஐபி சந்திப்பு! கோலிவுட்டை அதிரவைத்த ரவி மோகனின் ‘மாஸ் கம்பேக்’…! தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடப்பது என்ன…!
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடுத்தடுத்த சந்திப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை மற்றும் விவாகரத்து விவகாரங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்கப் போவதாகக் கண்ணீர் மல்க அறிவித்து, பின்னர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), தற்போது மீண்டும் தனது சினிமா பணிகளைத் தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக, கல்வி மற்றும் சினிமா துறைகளை கவனித்து வரும் தவெக அமைச்சர் ராஜ்மோகனை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சினிமா துறைக்கு ராஜ்மோகன் அமைச்சராக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் போன்றோர் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், ரவி மோகன் முதலாளராகச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தியிருப்பது கோலிவுட்டில் உற்றுநோக்கப்படுகிறது.
மறுபுறம், பிரபல நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, இன்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துச் சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் வாழ்த்துகளையும், சில முக்கியக் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். தனது குடும்பப் பிரச்சினைக்குக் குஷ்புதான் காரணம் என ரவி மோகன் மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருந்த சூழலில், ஒரே நாளில் குஷ்பு மற்றும் ரவி மோகன் ஆகிய இருவருமே தவெக அரசின் முக்கியப் புள்ளிகளைச் சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த குஷ்பு, அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகனையும் நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், முதலமைச்சர் விஜய் மீதான விமர்சனங்களும் அரசியல் களத்தில் எழுந்துள்ளன. தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்த பின்னரும், விஜய் வாக்களித்த பொதுமக்களை நேரில் சென்று சந்திக்காமல், தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் சந்தித்து வருகிறார் என்றும், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க அவருக்கு யார் தடையாக இருப்பது என்றும் எதிர்க்கட்சிகளும் சில சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர். எனினும், திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கே முதலமைச்சரும், அமைச்சர்களும் இந்தச் சந்திப்புகளை நிகழ்த்துவதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது.
‘புட் சட்னி’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி, ‘பாபா பிளாக் ஷிப்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்மோகன், தவெக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி, தேர்தலில் வென்று தற்போது கல்வி மற்றும் சினிமா துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ரவி மோகன் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் முதலமைச்சர் விஜய்யையும் ரகசியமாகச் சந்தித்தாரா, இருவருக்குமான புகைப்படங்கள் விரைவில் வெளியாகுமா என்ற கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளன.
