CINEMA
தியேட்டர்ல மாஸ்…ரசிகர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே எனக்குத் தெரியும்… ‘கருப்பு’ பட கிராபிக்ஸ் சொதப்பல் குறித்து ஓப்பனாக பேசிய இயக்குநர்…ஓடிடில மரண ட்ரோல்…!
சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘கருப்பு’ திரைப்படம், கடந்த ஜூன் 12ஆம் தேதி ஓடிடி (OTT) தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், ஓடிடியிலும் அதே அளவிலான ஆதரவைப் பெறும் என்றே படக்குழுவினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ஓடிடி ரிலீஸிற்குப் பிறகு இத்திரைப்படம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்தது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் (VFX) காட்சிகள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் பல்வேறு குறைகளை அடுக்கடுக்காகச் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், இணையத்தில் எழுந்துள்ள இந்த கடுமையான விமர்சனங்கள் குறித்து படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தற்போத்போது மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “கருப்பு படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முழுமையான தரத்தை வழங்க குறைந்தது 8 முதல் 10 மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், பட்ஜெட் மற்றும் காலக்கெடு தொடர்பான சில நிதி நெருக்கடி சிக்கல்களால் குறிப்பிட்ட சில இடங்களில் தரத்தில் சமரசம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. மேலும், அந்த காட்சிகள் கதையின் நகர்வுக்கு மிகவும் முக்கியமானவை என்பதால் அவற்றை எங்களால் படத்திலிருந்து நீக்கவும் முடியவில்லை” என்று தனது இக்கட்டான சூழ்நிலையை விளக்கியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டமாகத் திருவிழா போல படம் பார்க்கும்போது இதுபோன்ற சில தொழில்நுட்பக் குறைகள் பெரிதாகத் தெரியாது. ஆனால், ஓடிடியில் தனித்தனியாகப் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் உற்று நோக்குவதால் அந்த குறைகள் எளிதாக வெளிப்பட்டு விடுகின்றன. ரசிகர்கள் இந்த தவறுகளைச் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானதே. ஓடிடி ரசிகர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க முடியாததற்கு வருந்துகிறேன்; அடுத்த முறை இன்னும் சிறந்த படைப்பைக் கொடுக்க முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார். தவறுகளை மறைக்காமல் நேர்மையுடன் ஒப்புக்கொண்ட இயக்குநரின் இந்த எதார்த்தமான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
