LATEST NEWS
அமெரிக்கா – ஈரான் மோதலால் இந்தியாவுக்கு வந்த சோதனை… வழியிலேயே தேங்கி நிற்கும் 60,000 டன் அரிசி…பாஸ்மதி அரிசி பிரியர்களுக்கு ஜாக்பாட்…அதிரடியாக குறையும் விலை…ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் பதறும் ஏற்றுமதியாளர்கள்…!
ஈரான் அரசு ஹார்மூஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசி மற்றும் தேயிலை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளுக்கான இந்த கடல்வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், தேங்கி நிற்கும் பாஸ்மதி அரிசியின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை குறையக்கூடும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அண்மையில் அமெரிக்கா – ஈரான் இடையேயான தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை நம்பி, ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பாஸ்மதி அரிசியைக் கொள்முதல் செய்ததால் அதன் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருந்த நிலையில், ஈரானின் இந்த திடீர் அறிவிப்பு சந்தையில் பெரும் விலைச் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் சவூதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய மேற்கு ஆசிய நாடுகள் மட்டுமே 50 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. தற்போதைய போக்குவரத்துத் தடையால், மேற்கு ஆசியச் சந்தைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுமார் 60,000 டன் பாஸ்மதி அரிசி வழியிலேயே தேங்கி நிற்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஆண்டு பாஸ்மதி அரிசி உற்பத்தியான 7.2 மில்லியன் டன்னில், சுமார் 6 மில்லியன் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் முடக்கத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சந்தையும் நேரடியாகவும் மிக மோசமாகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசியைப் போலவே, இந்தியத் தேயிலை ஏற்றுமதிக்கும் மேற்கு ஆசியா ஒரு மிக முக்கியமான சந்தையாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள நுகர்வோர் அதிகம் விரும்பும் இந்தியாவின் பிரீமியம் தர ‘செகண்ட் ஃபிளஷ்’ பாரம்பரியத் தேயிலை, நாட்டின் அன்னியச் செலாவணி வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதி 285 மில்லியன் கிலோ என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியிருந்த வேளையில், தற்போதைய ஹார்முஸ் நீரிணை முடக்கமும், செங்கடல் துறைமுகங்கள் வழியிலான கப்பல் போக்குவரத்துக் கட்டண உயர்வும் இந்தியத் தேயிலை ஏற்றுமதியை முடக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக வர்த்தக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
