CINEMA
“3 விரல்கள் துண்டிப்பு… பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வடிவேலு காமெடி நடிகர்…ஓடோடி வந்து ‘லெஜண்ட்’ சரவணன் செய்த அந்த காரியம்…முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீர் கோரிக்கை…வீட்டுக்கே நள்ளிரவில் காசோலையுடன் சென்ற கூல் சுரேஷ்… பின்னணி என்ன?…..
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து, தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் நடிகர் பாவா லட்சுமணன். அண்மைய காலமாக இவருக்குச் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் கடுமையான வறுமையில் வாடி வந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த கண்ணீர் பேட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டர் மீது கால் வைத்ததால் ஏற்பட்ட கடுமையான தொற்றின் காரணமாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது காலின் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் நடக்க முடியாமல், சாப்பாட்டிற்கும் மருத்துவச் செலவிற்கும் கூட காசின்றி தவிப்பதாகவும், தங்கியிருக்கும் வீட்டையும் காலி செய்யச் சொல்லிவிட்டதால் முதலமைச்சர் விஜய் தனக்கு உதவ வேண்டும் என்றும் அவர் விம்மி அழுதபடி கோரிக்கை விடுத்திருந்தார்.
பாவா லட்சுமணனின் இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அதைப் பார்த்த தொழிலதிபரும் நடிகருமான ‘லெஜண்ட்’ சரவணன் உடனடியாக மனிதாபிமானத்தோடு உதவ முன்வந்துள்ளார். லெஜண்ட் சரவணனின் உத்தரவின் பேரில், அவருடைய உதவியாளர்களுடன் பிரபல நடிகர் கூல் சுரேஷ், பாவா லட்சுமணனின் வீட்டுக்கே நேரில் சென்றுள்ளார். அங்கே வறுமையில் வாடும் பாவா லட்சுமணனிடம் லெஜண்ட் சரவணன் வழங்கிய 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை (Cheque) கூல் சுரேஷ் நேரில் வழங்கியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த எதிர்பாராத நிதியுதவி, பாவா லட்சுமணனின் குடும்பத்தினருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
தனக்குக் கிடைத்த இந்த உதவி குறித்துக் கண்ணீருடன் பேசிய பாவா லட்சுமணன், “நான் லெஜண்ட் சரவணன் சார் படத்தில் இதுவரை நடித்தது இல்லை; ஏன், அவரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. அப்படி இருந்தும், நான் கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு மனசு தாங்காமல் ஓடிவந்து எனக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்துள்ளார். இதனை என் வாழ்நாளில் நான் எப்பவுமே மறக்க மாட்டேன்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இதுவரை நேரில் பார்த்திராத ஒரு சக கலைஞனின் துயர் துடைக்க ஓடோடி வந்து உதவிய லெஜண்ட் சரவணனின் இந்த மனிதநேயமிக்க செயலுக்குத் திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
