LATEST NEWS
முதல்வர் விஜய்யை கிண்டல் செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்… எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கொடுத்த சாட்டையடி…. சட்டசபையில் அதிரடி…!!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போதைய முதலமைச்சர் விஜய்யை வம்பிழுக்கும் நோக்கில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சைகை மொழியில் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
அவையின் நேரடி ஒளிபரப்பில் தற்செயலாகப் பதிவான இந்த முகபாவனை காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இச்சம்பவம் நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க மாமன்றத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அவைகூடியதும் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டமன்ற நிகழ்வுகள் யாவும் மக்களுக்குத் தற்பொழுது நேரலையாகக் காட்டப்படுவதால் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பொறுப்பறிந்து மிகவும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அவையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் இத்தகைய கண்ணியக்குறைவான செயல்களில் இனிமேல் எவரும் ஈடுபடக் கூடாது என்றும், இந்த விதியை மீறி கேலிப் பேச்சுகளிலோ அல்லது சைகைகளிலோ தொடர்ந்து ஈடுபட்டால் அது அவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தோ அல்லது தனிநபர்களைத் தாக்கியோ அவையில் பேசக் கூடாது என்றும், விவாதங்களின் போது கருத்துகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்தார்.
