CINEMA
நான் ஒன்றும் கையாட்டி பொம்மை இல்லை…கலைக்கப்பட்ட நிர்வாகக் குழு…வரவு-செலவு கணக்கில் முறைகேடா?…பாலியல் புகார்களுக்குப் பின் ‘அம்மா’ சங்கத்தில் வெடித்த மோதல்…சுவேதா மேனன் அதிரடி ராஜினாமா…!
மலையாளத் திரையுலகின் முன்னணி அமைப்பான ‘அம்மா’ (AMMA) நடிகர் சங்கம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து பல்வேறு பாலியல் புகார்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கித் தவித்து வருகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைமையிலான கமிட்டி, ‘நீதிபதி ஹேமா கமிட்டி’ அறிக்கைக்குப் பின் எழுந்த பாலியல் புகார்களால் ஒட்டுமொத்தமாகப் பதவியை ராஜினாமா செய்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2025 ஆகஸ்டில் இந்த 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சங்கத்தின் முதல் பெண் தலைவராகப் பிரபல நடிகை சுவேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தற்போது அவரும் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது இந்தியத் திரையுலகையே அதிர வைத்துள்ளது.
கொச்சியில் நடந்த ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு-செலவு கணக்குகளைப் பொதுச்செயலாளர் குக்கூ பரமேஸ்வரன் தாக்கல் செய்தபோது பெரும் வாக்குவாதம் வெடித்தது. மூத்த நடிகர்களான சித்திக், இடவேள பாபு ஆகியோர் தலைமையில் ஒரு தரப்பினர், இந்தக் கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறிப் போராட்டம் செய்தனர். கூட்டத்தில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, தலைவர் சுவேதா மேனன் தனது பதவியையும், சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். “பாலியல் புகார்களை எதிர்கொண்டு வரும் சில நபர்களின் கைகளுக்குள் இந்தச் சங்கத்தைக் கொண்டு செல்லச் சதி நடக்கிறது; அதற்குத் துணையாக நான் வெறும் கையாட்டி பொம்மையாக இங்கே இருக்க விரும்பவில்லை” என்று செய்தியாளர்களிடம் அவர் ஆவேசமாகக் கூறிவிட்டு வெளியேறினார். 2017-ஆம் ஆண்டு நடந்த நடிகை கடத்தல் வழக்கில் இருந்து 2025 டிசம்பரில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப் மற்றும் பாலியல் புகார்களில் சிக்கிய வேறு சில ஆண் நடிகர்களின் ரகசிய லாபிகள் இன்னமும் இந்தச் சங்கத்திற்குள் மிக வலுவாக இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மறுபுறம், இந்த விவகாரம் குறித்துப் பேசிய மூத்த நடிகர் ஜெகதீஷ், சுவேதா மேனன் தலைமையிலான கமிட்டியால் கணக்குகளைச் சரியாகத் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும், தங்களின் உள்விவகாரங்களை மீடியாவுக்குக் கொண்டு சென்று சங்கத்தின் பெயரைக் கெடுத்துவிட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்கள் முயன்றதால், அதற்குப் பயந்துதான் தீர்மானம் வருவதற்கு முன்பே ஒட்டுமொத்தக் குழுவும் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, நடிகர் மற்றும் எம்.எல்.ஏ-வான ரமேஷ் பிஷாரடி தலைமையில் ஒரு தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் நடக்கும் வரை இவர்களே சங்கத்தின் செயல்பாடுகளைக் கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
