CINEMA
“கோடிக்காக என் கொள்கையை மாத்த முடியாது..!” முத்தக் காட்சிக்கு ‘நோ’ சொன்ன சாய் பல்லவி…! வைரலாகும் போல்ட் பேட்டி..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘ஓம்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும், கவர்ச்சியை முன்னிறுத்தாத கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாலும் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள சாய் பல்லவி, பாலிவுட்டிலும் இதே கொள்கையைப் பின்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைப்படங்களில் நெருக்கமான மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து சாய் பல்லவி தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், தனக்கு ஒரு காதலர் இருந்தால் அவர் நடிப்பிற்காகக் கூட இன்னொருவரை முத்தமிடக் கூடாது என்றே தான் நினைப்பதாகக் கூறியுள்ளார். மேலும், ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ நல்ல குடும்பம், வீடு, கார் இருந்தாலே போதும் என்றும், அவை ஏற்கனவே தன்னிடம் இருப்பதால், இன்னொரு கார் வாங்கவோ அல்லது கூடுதல் சம்பளத்திற்காகவோ தனது கொள்கையை மாற்றி முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் வாழும் வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தயாரிப்பாளர்கள் தனது நடிப்பை விரும்பி அணுகினால் மகிழ்ச்சியுடன் நடிப்பதாகக் கூறியுள்ளார். ஒருவேளை அந்தப் படத்தில் நெருக்கமான அல்லது முத்தக் காட்சிகள் கண்டிப்பாகத் தேவைப்படும் பட்சத்தில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தாராளமாக வேறு நடிகையைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், அதில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். சாய் பல்லவியின் இந்த துணிச்சலான பேச்சு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்று வருகிறது.
