LATEST NEWS
“வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும்” என நம்பி இணையத்தை பார்த்து பரிகாரம் செய்த நபர்… கண் பார்வையே பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி..!
கண் துடிப்பதை நிறுத்த இணையதளத்தில் பார்த்த மூடநம்பிக்கையான பரிகாரத்தைப் பின்பற்றி, சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கண் பார்வையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரைச் சேர்ந்த ‘லே’ என்ற நபருக்கு வலது கண் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருந்துள்ளது. சீனாவில் வலது கண் துடித்தால் கெட்டது நடக்கும் என்ற மூடநம்பிக்கை உள்ளதால், அவர் பயந்துபோய் மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக இணையத்தில் தீர்வு தேடியுள்ளார். கண் துடிக்கும்போது அதன் மேல் தட்டினால் கெட்ட அதிர்ஷ்டம் நீங்கும் என்று இணையத்தில் படித்ததை நம்பி, அவர் தொடர்ந்து மூன்று நாட்களாகத் தனது கண்ணின் மேல் பலமாகத் தட்டி, அடித்துக் கொண்டுள்ளார்.
இதன் விளைவாக, அவரது கண்ணின் துடிப்பு நின்றாலும், அவரது கண் பார்வை மங்கத் தொடங்கி, ஒரு கட்டத்தில் முற்றிலும் பார்வை தெரியாமல் போயுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, பலமாக அடித்ததன் காரணமாக அவரது கண்ணின் விழித்திரை (Retina) அதன் இடத்தை விட்டு விலகியிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், அதிர்ஷ்டவசமாக அவரது கண் பார்வை மீண்டும் கிடைத்தது. மனிதனின் விழித்திரை காகிதத்தை விட மெல்லியது என்றும், கண்ணில் பலமாக அடிக்கும்போது அது கிழிந்து நிரந்தரக் குருட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக கண் துடிப்பது என்பது எந்தவொரு அபசகுனமும் அல்ல, அது உடலின் ஒரு சமிக்ஞை மட்டுமே என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். நீண்ட நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பது, தூக்கமின்மை மற்றும் அதிக மன அழுத்தம் போன்றவற்றால் தான் கண்கள் துடிக்கின்றன. போதிய ஓய்வு எடுத்தல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமே இதைச் சரிசெய்ய முடியும். இணையத்தில் வரும் சரிபார்க்கப்படாத மருத்துவக் குறிப்புகள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது
