LATEST NEWS
எங்க ஏரியா டீக்கடைக்காரர் மாசம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கிறார்…! போங்கடா நீங்களும் உங்க வேலையும்… ஐடி வேலையை தூக்கியெறிந்த ஊழியர்.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மனக்குமுறல் வீடியோ..!!!
பெங்களூருவைச் சேர்ந்த பிரமோத் என்ற கார்ப்பரேட் நிறுவன மூத்த ஆய்வாளர், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, கையில் மாற்று வேலை எதுவும் இல்லாத சூழலிலும் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு, மூத்த அதிகாரி என்ற முறையில் தொடர்ந்து கூடுதல் பொறுப்புகளும் கடினமான பணிகளும் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், அதற்கு இணையாக அவரது சம்பளம் உயர்த்தப்படாததால், பணத்தை விடத் தனது மன அமைதியே முக்கியம் என்ற முடிவுக்கு வந்து அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். பெற்றோர்கள் தனது படிப்புிற்காக வாங்கிய கடன் இன்னும் இருக்கும் நிலையிலும் அவர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஒரு வருடம் முழுவதும் மிகக் கடினமாக உழைத்த தனக்கு வெறும் 6 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டதாகப் பிரமோத் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ஆதங்கப்பட்டுள்ளார். இந்த உயர்வு மாதத்திற்கு வெறும் ரூ.2,000 மட்டுமே ஆகும். இந்த சொற்ப ஊதிய உயர்வுக்காகத் தினசரி மன அழுத்தத்தை எதிர்கொண்டதால், அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவ ஆலோசனைக்கு ரூ.2,000 மற்றும் மன அழுத்த மேலாண்மை சிகிச்சையின் ஒரு பகுதிக்கு ரூ.3,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தான் ஒரு வருடம் முழுவதும் பாடுபட்டுப் பெற்ற ஊதிய உயர்வை விட, அந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சைக்கே அதிகப் பணம் செலவாவதை உணர்ந்த தருணமே அவரை வேலையை விடத் தூண்டியுள்ளது.அவர் தனது வீடியோவில் நகைச்சுவையாக, தனது பகுதியில் டீ விற்பவர் கூட மாதத்திற்கு ரூ.2 லட்சம் சம்பாதிப்பதாகக் கார்ப்பரேட் சிஸ்டம் மற்றும் உழைப்புச் சுரண்டலைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது; ஒரு தரப்பினர் எந்தவொரு வேலையையும் விட மன ஆரோக்கியமே முக்கியம் என்று அவரது முடிவைப் பாராட்டி வரும் வேளையில், மற்றொரு தரப்பினரோ, கடன் இருக்கும் போது மாற்று வேலை இல்லாமல் இப்படி அவசரப்பட்டு ராஜினாமா செய்வது நிதியியல் ரீதியாகப் பெரும் ஆபத்து என்று தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DaH-VlGNgdF/?utm_source=ig_web_button_share_sheet
