LATEST NEWS
கயிறு இல்லாமல் பங்கி ஜம்பிங் செய்ய வேண்டியதுதான்…! ஸ்பிதி பள்ளத்தாக்கில் பேருந்து கூரையில் ஆபத்தான பயணம்… வைரலாகும் வீடியோவால் சர்ச்சை..!!
இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஸ்பிதி பள்ளத்தாக்கில், நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் கூரை மீது அமர்ந்து ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை அழகையும், பௌத்த மடாலயங்களையும் ரசிப்பதற்காகப் பெயர் பெற்ற இந்த மலைப் பிரதேசத்தில், சுமார் 10 பேர் அடங்கிய சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று, ‘பல்வந்த் ஆபரேட்டர்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்தின் மொட்டை மாடியில் அமர்ந்து சத்தமிட்டபடி, விபரீதத்தை உணராமல் பயணித்துள்ளது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தான பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்ட நிகில் சைனி என்பவர், இப்பகுதியின் தீவிரமான ஆபத்துகளைப் பற்றி எச்சரித்துள்ளார். அவர்கள் பயணிக்கும் சாலையின் கீழே சுமார் 200 மீட்டர் ஆழமான படுகுழியும், அதில் குளிர்ந்த சத்லெஜ் நதியும் பாய்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செங்குத்தான மலைச்சாலைகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கூட மிகவும் கடினம் என்றும், ஆனால் இந்த ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் பேருந்தின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சண்டிகரைச் சேர்ந்த அந்த டூர் ஆபரேட்டர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத்தகைய ஆபத்தான பயணத்திற்கு அவர்கள் எவ்வாறு அனுமதித்தார்கள் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “பேருந்தில் திடீரென பிரேக் அடித்தால், இவர்கள் அனைவரும் கயிற்றின்றி நேரடியாகப் பங்கி ஜம்பிங் செய்ய வேண்டியதுதான்” என்றும், பொழுதுபோக்கிற்காக உயிரைப் பணயம் வைத்து பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் செயலை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
