LATEST NEWS
“எத்தனை வழக்கறிஞர் வந்தாலும் சரி… ஒரு எதிரி கூட தப்பிக்க முடியாது..!” சட்டசபையை அதிரவைத்த மாணவர் கொலை வழக்கு… அவையிலேயே வெளிவந்த முக்கிய அறிவிப்பு..!!
4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடிய தமிழ்நாடு சட்டசபையில், கோவை கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து புகாரளித்த மாணவன் 20 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் காவல்துறை மீது குற்றம்சாட்டினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்விச் சாலைகள் எளிய பெற்றோர்களின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு என்றும், அதில் வன்முறையோ போதைப் பழக்கமோ இருக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம் என்றும் தெரிவித்தார். கோவை மற்றும் திருவொற்றியூரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்துப் பேசிய அவர், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குழந்தை என்றும், அவர்களின் குடும்ப துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும், நேர்மையான விசாரணை நடைபெற முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக எஸ்சி/எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பாதுகாப்பு மற்றும் நேர்மையான விசாரணை ஆகியவை உறுதி செய்யப்படும் என்றார். இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் சிறுவர்களாக இருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மாணவர்களான அமுதன் மற்றும் தனுஷ் வழக்குகள் மூலம் சட்டரீதியாக ஒருவரும் தப்பிக்க முடியாதபடி தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தித் தேவையான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இறுதியாக, அரசு எடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அமைச்சர், திருவொற்றியூரில் கொல்லப்பட்ட மாணவன் தனுஷின் மூத்த சகோதரருக்கு எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் அரசு வேலை வழங்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நிவாரணத் தொகையுடன் அச்சிறுவனின் பெற்றோருக்கு மாதம் ரூ.8,000 ஓய்வூதியம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டுத்தான் சட்டசபைக்கு வந்துள்ளதாக அவர் கூறினார். இச்சம்பவத்தில் நேர்மையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் அவையில் உறுதியளித்தார்.
