LATEST NEWS
உலகமே வெயிலில் வாட… சீனாவிடம் சிக்கிய தீர்வு…! வைரலாகும் ‘ரூஃப்டாப் ரெயின்’ தொழில்நுட்பம்..!இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கடுமையான வெப்ப அலையினால் தவித்து வரும் வேளையில், சீனா தனது நாட்டின் குடியிருப்புப் பகுதியில் கட்டிடங்களின் கூரைகளில் இருந்து செயற்கை மழையைப் பொழியச் செய்து வெப்பநிலையைக் குறைக்கும் ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.
இந்த முறையில், கட்டிடங்களின் மேல் பகுதியில் ‘மிஸ்ட் கூலிங் சிஸ்டம்’ எனப்படும் பனிமூட்டம் போன்ற நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கட்டிடத்தின் உச்சியிலிருந்து லேசான தூறல் போன்ற செயற்கை மழையை உருவாக்குவதால், இதற்கு ‘ரூஃப்டாப் ரெயின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பை இயக்கிய சில நிமிடங்களிலேயே சுற்றுப்புறத்தின் ஒட்டுமொத்த வெப்பநிலையை சுமார் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை உடனடியாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான தொழில்நுட்பத்தின் வீடியோவை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, தொழில்நுட்ப ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றாலும், நெட்டிசன்கள் மத்தியில் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க இந்த யோசனை சிறப்பாக இருந்தாலும், இதில் பெருமளவில் தண்ணீர் வீணடிக்கப்படுவதாகப் பலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தண்ணீரை வீணாக்காமல் மீண்டும் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான வழிகளையும் சீனா இதனுடன் சேர்த்து உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
