LATEST NEWS
கல்யாணம் ஓகே… ஆனா சொத்து கிடையாது..! திருமணத்தின் போதே ஜார்ஜினாவுக்கு ரொனால்டோ போட்ட கடுமையான ஒப்பந்தங்கள்..!!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை சமீபத்தில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து 5 குழந்தைகளுக்குப் பெற்றோராக உள்ளனர். இவர்களது திருமணத்தில் நீண்டகால நண்பரான மிகுவல் பைக்சாவோ மற்றும் ஜார்ஜினாவின் சகோதரி இவானா உள்ளிட்டோர் சாட்சிகளாகக் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது குடும்பப் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் போர்ச்சுகல் சட்ட விதிகளின்படி, சொத்துப் பிரிவினை ஒப்பந்தத்தின் கீழ் இவர்கள் திருமணப் பதிவை மேற்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி, இருவரின் தனிப்பட்ட சொத்துக்கள், வருமானம் மற்றும் முதலீடுகள் முழுமையாக அவரவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் எதிர்காலத்தில் ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டாலும், இவர்களது சொத்துக்கள் தானாகப் பிரிக்கப்படாது. சவுதி புரோ லீக் கிளப் அல்-நாசர் வழங்கும் ஊதியம், பெஸ்தானா சிஆர்7 ஓட்டல் வணிகம், பிற விளம்பர ஒப்பந்தங்களின் வருமானம் மற்றும் இதுவரை உள்ள சொத்துக்கள் அனைத்தும் முழுமையாக ரொனால்டோவிடமே இருக்கும்.
ஒருவேளை விவாகரத்து செய்யும் சூழ்நிலை உருவானால், ஜார்ஜினாவுக்கு ரொனால்டோ தரப்பிலிருந்து மாதம்தோறும் சுமார் ரூ.1.10 கோடி ஜீவனாம்சமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள சுமார் ரூ.53.50 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவின் முழு உரிமையும் ஜார்ஜினாவுக்கு வழங்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
