“விறகு வெட்டுறதுக்கு முன்னாடி மன்னிப்பு கேளு..!” குடியரசுத் தலைவர் சொன்ன அந்த ஒரு விஷயம்… நெகிழ்ந்து போன அரங்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விறகு வெட்டுறதுக்கு முன்னாடி மன்னிப்பு கேளு..!” குடியரசுத் தலைவர் சொன்ன அந்த ஒரு விஷயம்… நெகிழ்ந்து போன அரங்கம்..!!

Published

on

டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் ‘சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், “எனது தந்தை வீட்டிற்குச் சமையல் செய்வதற்காக அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து காய்ந்த விறகுகளைக் கொண்டு வருவார். ஆனால், அந்த விறகுகளை வெட்டுவதற்கு முன்பாக, மரத்தை மரியாதையுடன் வணங்கி மன்னிப்பு கேட்பார்” என்று கூறினார். “விறகை வெட்டுவதற்கு முன் ஏன் பிரார்த்தனை செய்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டபோது, “ஒரு காலத்தில் இந்த விறகும் நமக்குக் கனி, பூ, காற்று, நீரைக் கொடுத்த மரத்தின் ஒரு பகுதியாக இருந்தது; தற்போது உலர்ந்து போன போதிலும் அது நமக்குச் சேவை செய்கிறது” என்று தந்தை விளக்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர், நிலத்தை உழுவதற்கு முன்பாகவும் தனது தந்தை பூமிக்கு முன் தலைவணங்குவதை நினைவு கூர்ந்தார். “நாம் விளைவிக்கும் அனைத்துப் பயிர்களும் பூமியால்தான் சாத்தியமாகிறது, பூமிதான் நமது தாய்” என்று தந்தை கூறியதாகத் தெரிவித்த அவர், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இந்த ஆழமான பிணைப்பும் பணிவு உணர்வும் இந்தியப் பண்பாட்டில் மிக ஆழமாகப் பதிந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மரங்களின் இலைகளையும் விறகுகளையும் விற்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆண்டுதோறும் இலைகளைப் பறித்துக் கொண்டே இருந்தால் தாவரங்களால் மரமாக வளர முடியாது என்றும், மக்கள் தங்களை மாற்றிக் கொண்டால் பூமிதானாகவே மாறும் என்றும் கூறினார்.

Advertisement

பருவநிலை மாற்றம் குறித்துப் பேசுகையில், “பருவநிலை மாற்றம் மனித வாழ்க்கையின் பல தளங்களில் சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. பல்லுயிர் இழப்பு, நீர் நெருக்கடி, நிலத்தின் தரம் குறைதல் போன்ற பிரச்சினைகள் இதனுடன் ஆழமாகத் தொடர்புடையவை. இது உணவுப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்திலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார். காடழிப்பைத் தடுத்து நிலையான காடு வளர்ப்பை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், காடு வளர்ப்பின் உண்மையான நோக்கம் மரங்களை நடுவது மட்டுமே அல்ல; மாறாக ஆரோக்கியமான, சுயசார்புடன் வளரக்கூடிய ஒரு சூழியல் மண்டலத்தை மீண்டும் மீட்டெடுப்பதே ஆகும் என்று கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in