CRIME
ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்..? ஒரே நாவல் மரத்தில் தூக்கில் தொங்கிய 2 இளம் தோழிகள்: உ.பி.யை உலுக்கிய தற்கொ** மர்மம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஒரே நாவல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகோஹி காவல் எல்லைக்குட்பட்ட ஹரையா கிராமத்தில் திங்கட்கிழமை அதிகாலை இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அன்று காலை கிராம மக்கள் வழக்கம் போல் வயல்வெளிக்கு வேலைக்குச் சென்றபோது, மரத்தில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவினர், உடல்களைக் கைப்பற்றி முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், உயிரிழந்த இருவரும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சிறந்த தோழிகள் என்பதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இருவரது வீடுகளும் மிக அருகருகே அமைந்துள்ள நிலையில், இவர்களது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தற்கொலை மற்றும் கொலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
