LATEST NEWS
“திரிஷா விஜய்” என்ற பெயரில் ஏதேனும் எழுத்தாளர் இருக்கிறாரா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நூலகப் பரிந்துரைக் குழுவில் இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனே அம்பலப்படுத்தியுள்ளார். இத்தகையச் சூழலில், குழுவில் இருந்தவரே ஊழல் குறித்துக் கூறியும் இதுவரை ஏன் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை, ஏன் இந்தத் தாமதம் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் தொடர்பு உள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முறையான பதிப்பக முகவரிகளோ, தொலைபேசி எண்களோ இல்லாத நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறி, போலியான தகவல்களுடன் கூடிய புத்தகங்களை வாங்கியதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையை அரசு வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், விவாதப் பொருளாக மாறியுள்ள ‘அகல் விளக்கு’ பதிப்பகப் புத்தகங்களின் ஆசிரியர் பட்டியலைச் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், ‘திரிஷா விஜய்’ என்ற பெயரில் ஏதேனும் எழுத்தாளர் இருக்கிறாரா, அப்படி ஒரு புத்தகம் நூலகத்தில் இடம் பெற்றுள்ளதா என்பதைப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த கால திமுக ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் பெரியார் பெயரைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த நூலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
